தாயுமானவளான ஆனந்தவல்லி தாயார்
இவ்வாலயத்திற்கு அருகில் கீரிக்குன்று ( இடைச்சிக்குன்று ) என்று அழைக்கப்படும் ஒரு சிறு குன்று உள்ளது. இது மதுராந்தகம் ஏரி நீர்பிடிப்புப் பகுதியாக உள்ள இவ்ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியாகும். இக்காலத்திலும் பச்சைப் பசேலென புல் மற்றும் தாவரங்கள் நிறைந்த பகுதி என்பதால் ஆடு , மாடுகள் போன்ற கால்நடைகளுக்கு மேய்ச்சலுக்கு சிறந்த பகுதியாகும் . அக்காலத்தில் இங்கு ஒரு கர்ப்பிணியான யாதவப் பெண்மணி ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்த போது பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. நரிகள் இப்பகுதியில் அதிகம் இருக்குமாம்.
அப்படிப்பட்ட நிலையில் உதவிக்கு ஒருவரும் இல்லாத சூழ்நிலையில் அக்குன்றிலுள்ள ஒரு பாறை மறைவில் ஒதுங்கி இறைவனை வேண்டிக்கொள்ள , ஆனந்தவல்லி தாயாரே தாயுமானவளாக தோன்றி அப்பெண்ணிற்கு பிரசவம் பார்த்ததாக இப்பகுதியை சேர்ந்த பெண்களிடையே நம்பிக்கை நிலவுகிறது. இன்றைக்கும் இக்குன்றில் உள்ள ஒரு பாறையில் அமாவாசை தினத்தில் இரத்தம் போன்ற திரவம் வடிவதைக் காணலாம். எப்போது சென்றாலும் அந்த பாறையில் இரத்தம் ஒழுகி காய்ந்தது போன்ற தோற்றத்தைக் காணலாம். கர்ப்பிணி பெண்கள் இங்கு வந்து ஆனந்தவல்லி தாயாரை வேண்டிக்கொண்டால் சுகப்பிரசவம் நிகழும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இவ்வாலயத்தில் ஒரு பிரதோஷம் வழிபாடு செய்வித்தால் ஏழு ஜென்மம் எடுத்து அத்தனை ஜென்மங்களிலும் பிரதோஷ வழிபாடு செய்வித்த பலன் கிடைக்கும்.
இவ்வாலயம் புனர்பூச நட்சத்திரத்திற்கும் , ஆயில்ய நட்சத்திரத்திற்கும் பரிகார ஸ்தலமாகும்.
எந்த ஒரு செயலும் தொடங்கும் முன்னர் இவ்வாலய ஈசனை வழிபட்டு துவங்கினால் அந்த பணியானது வெற்றி பெறும். ஏனெனில் இராமபிரானும் , அகத்திய மாமுனிவரும் , யக்க்ஷய கின்னரர்களும் , தேவர்களும் வழிபடுகின்ற அபயவனநாதன் குடிகொண்ட ஆலயமாகும். மேலும் அக்காலத்தில் அரசர்கள் போரில் வெற்றி பெற்றால் வெற்றியின் சின்னமாக கொன்றை மலர்களை அணிவார்களாம் . வெற்றியின் சின்னமான கொன்றை மலர்கள் பூக்கும் சரக்கொன்றை மரமே இந்த திருக்கோயிலின் ஸ்தல விருட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆலய சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டுமென்றால் பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அப்போது தான் இவ்வாலயத்தில் குடிகொண்ட ஈசனை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். மேலும் உச்சி வேளையில் இங்கு சிவதரிசனம் செய்வது சிறப்பான பலனை கொடுக்கும்.
குரு பரிகார ஸ்தலம் :
கச்சி ஏகம்பம் என்ற தொண்டை வளநாட்டில் முதலாம் பராந்தகச்சோழனால் உருவாக்கப்பட்ட ஜெயம் கொண்ட சோழமண்டலத்து, களத்தூர் கோட்டம், புலியூர் என்ற சதுர்வேத மங்கலம் எனப் போற்றப்பட்ட இப்பகுதியில் அமைந்துள்ள இவ்வாலயம் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த ஸ்தலமாகும். இங்கு பரமேஸ்வரன் குருவாக இருந்து நான்கு வேதங்களை உபதேசம் செய்ததால் சதுர்-வேத மங்கலம் எனத் திருப்பெயர் பெற்றது.
இத்தலம் பிரகஸ்பதியான குரு பகவான் சாப விமோசனம் பெற்ற ஸ்தலமாகும். குருபகவானுக்கு அகந்தை ஏற்பட்டு இன்னல்படும் போது தனது சாபம் நீங்க வேண்டி இங்குள்ள அகத்தியதீர்த்தத்தில் நீராடி உச்சிக்கால வேளையில் ஈசனை தரிசனம் செய்து தனது சாபத்தை போக்கிக் கொள்கிறார்.
இதனால் இத்தலம் குரு பரிகார ஸ்தலமாகும். ஜாதகத்தில் குரு உச்சம் மற்றும் நீச்சம் உள்ளவர்கள் இவ்வாலய ஈசனை வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும்.